இறை மந்திரம்

"மன் " என்றால் மனம்

"திரா" என்றால் விடுவித்தல்

மனதை இறைவனை நோக்கி மந்திரம் கூறி துதித்தால் , துன்பங்களில் இருந்து விடுபெறுவோம் என்று பொருள்.

வாழ்க்கையில் வெற்றி பெற அனுதினமும் கூற வேண்டிய மந்திரம்

ஓம் நமசிவாய வாழ்க! வாழ்க!!
ஓம் சச்சிதானந்தம் வாழ்க! வாழ்க!!
ஓம் சற்குருநாதர் வாழ்க! வாழ்க!!
மந்திரத்தின் பொருள் :
ஓம் நமசிவாய வாழ்க! வாழ்க!!

" ஓம்" என்ற சப்தம் அண்டத்தில் ஒலிக்கப்படும் சப்தமாகும், இதனை இன்றைய காலகட்டத்தில் மேல்நாட்டு விஞ்ஞானிகள் கூட ஒப்புக் கொண்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.

" நமசிவாய" என்ற நாமம் பஞ்ச பூதங்களின் சப்தம்

ந - நிலம்
ம - நீர்
சி - அக்னி
வா - வாயு
ய - ஆகாயம்

இந்த பஞ்ச பூதங்களின் கூட்டமைப்பே இறைவன்.

"அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில்" என்பது பழமொழி. அண்டம் என்றால் பிரபஞ்சம் (Universe). இந்த பிரபஞ்சம் பஞ்ச பூதங்களினால் ஆனது. பிண்டம் என்றால் உடம்பு.

"ஓம் நமசிவாய வாழ்க ! வாழ்க !!" என்று கூறி பரம்பொருளாகிய பகவானை தனக்குள் வந்து வாழ வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறோம்.

இதையே திருமூலர் "உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்" என்று சொல்லுகிறார். இறைவனை இடைவிடாது உள்ளத்தில் நினைப்பதால் உடல் ஆலயம் ஆகிறது.

"காணக் காண முற்பட்டவன் கடவுள் ஆகிறான்" என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

ஆகவே, "நமசிவாய" என்ற இந்த பஞ்சாட்சர மந்திரத்தை இடைவிடாது உச்சரித்துக் கொண்டு நம் உள்ளத்தில் இறைவனை வணங்க முற்படும்போது நமது மனம் ஏழு திரைகளாகிய காமம், குரோதம், மோகம், லோபம், மதம், மாட்சரியம், பயம் போன்றவற்றின் பிடிகளிலிருந்து விடுபடுகிறது. பேரானந்தம் கிடைக்கிறது.

"தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்" என்பது அவ்வையின் வாக்கு. அப்படிப்பட்ட தவத்தை மேற்கொள்வதற்கு மூலமாக இருப்பது "ஓம் நமசிவாய" என்ற மூலமந்திரம்.

இந்த மூலமந்திரத்தை ஓய்வாக இருக்கும் போதும் வேலைகள் செய்யும் போது முடிந்த அளவும் சொல்ல பழகிக் கொண்டால் மனம் அனைத்து அழுத்தத்திலிருந்தும் விடுபடும்.

"நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமசிவாயத்தை நான் மறவேனே"
- வள்ளலார்
அதாவது, "ஓம் நமசிவாய" மந்திரத்தை இடைவிடாது உச்சரித்து நல்ல தவம் செய்பவர்களின் உள்ளத்தில் பிரசன்னமாகும் இறைவனை நான் மறக்கமாட்டேன் என்று கூறுகிறார்.

இப்படிப்பட்ட உயர்ந்த மந்திரத்தை நாமும் இடைவிடாது உச்சரிக்க முயற்சி செய்ய வேண்டும் அல்லவா ?

ஓம் சச்சிதானந்தம் வாழ்க! வாழ்க!!

சத்து + சித்து + ஆனந்தம் = சச்சிதானந்தம்
சத்து என்றால் ஜீவாத்மா
சித்து என்றால் ஜீவாத்மா பரமாத்மாவை அடைந்த நிலை

இதனால் என்ன கிடைக்கிறது?

ஜீவாத்மா பரமாத்மாவோடு இணையும் போது ஆனந்தம் கிடைக்கிறது. அதுவே சச்சிதானந்தம்.

ஓம் சச்சிதானந்தம் வாழ்க! வாழ்க! என்று சொல்ல சொல்ல நமக்கும் அந்த ஆனந்தம் கிடைக்கிறது.

ஓம் சற்குருநாதர் வாழ்க! வாழ்க!!

சற்குரு என்பவர் யார் ?

"சத்" என்றால் ஆத்மா. நமது ஆத்மாவிற்கு குருவாக இருப்பவரே சற்குரு.

சற்குரு இறைநிலையை அடைந்தவர். சற்குருவும் இறைவனும் வேறல்லர். பூமியில் சகல வல்லவரே சற்குரு , மனித ரூபத்தில் இருக்கும் இறைவனே சற்குரு பகவான்.

பகவான் ஸ்ரீ ராமர் , ஸ்ரீ கிருஷ்ணர் , புத்தர் , ஆதி சங்கரர் , ஸ்ரீ ராகவேந்திரர் , சீரடி சாய்பாபா, பகவான் ஞானவள்ளல், தற்பொழுது ஸ்ரீ சற்குருநாதர் இவ்வாறாக சற்குருமார்கள் பூமியில் இருந்து கொண்டே இருப்பர்.

உணர்வே பிரம்மம்,
பிரம்மமே சற்குரு,
சற்குருவே கடவுள்!

இலட்சியத்தினுள் எல்லாம் சிறந்த இலட்சியம் பகவானை அடைய வேண்டும் என்பதும், அத்துடன் மற்ற ஜீவாத்மாக்களும் கடவுளை அடைய ஆற்றும் தொண்டேயாகும். இப்படிப்பட்ட இலட்சியமே ஒப்புயர்வற்றது.
இதுவே எங்கள் இலட்சியம்!